கஜா புயல் காரணமாக மதுபானம் கிடைக்காததால் மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
கஜா புயல் காரணமாக மதுபானம் கிடைக்காததால் மொபட்டில் மதுபாட்டில் கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம்–ஓரியூர் சாலையில் உள்ள புதுக்காடு பகுதியில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட் வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில் 53 மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பெருமகளூர் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜாஜி என்பதும், கஜா புயல் காரணமாக மதுபானம் கிடைக்காததால் எஸ்.பி.பட்டினம் பகுதிக்கு வந்து மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வாங்கி கடத்திச்சென்றதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாஜி (வயது 44)யை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து40 கைப்பற்றப்பட்டது.