கஜா புயல் நிவாரணத்திற்கு உண்டியல் பணத்தை வழங்கிய பள்ளி மாணவர்கள்

கஜா புயல் நிவாரணத்திற்கு தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் பள்ளி மாணவ– மாணவிகள் வழங்கினர்.

Update: 2018-11-23 22:45 GMT

ராமநாதபுரம்,

தமிழகத்தில் கடந்த 16–ந்தேதி அன்று கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பிலும் மற்றும் தன்னார்வலர்கள் சார்பிலும் நிதி மற்றும் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதனை அறிந்த ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 69 மாணவ–மாணவிகள் தாங்களும் நிதி வழங்க முடிவு செய்தனர். இதன்படி வீடுகளில் உண்டியல்களில் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொண்டு வந்து ஆசிரியர்களிடம் கொடுத்தனர்.

இவ்வாறு 69 மாணவ–மாணவிகளும் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 900 பணத்தை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கும்படி தெரிவித்தனர். மாணவ–மாணவிகள் அனைவரும் பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

கலெக்டர் வீரராகவராவை சந்தித்த மாணவ–மாணவிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ–மாணவிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற நிதி உதவி செய்வதாக கூறி வழங்கினர். இந்த நிதியை பெற்றுக்கொண்ட கலெக்டர் பள்ளி மாணவ–மாணவிகளின் இந்த உதவும் மனப்பான்மை பாராட்டிற்குஉரியது என்றும், இவர்களை முன் உதாரணமாக கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அனைவரும் நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்க முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் செய்திகள்