அரிசி ஆலை திட்ட ஒப்புதலுக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்; பேரூராட்சி செயல் அலுவலர் கைது ஊழியரும் பிடிபட்டார்

அரிசி ஆலை திட்ட ஒப்புதலுக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-23 23:30 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி லதா. இவர் சிறு தொழில் திட்டத்தில் சிறு அரிசி ஆலை தொடங்க வங்கியில் ரூ.25 லட்சம் கடன் கேட்டு மனு செய்தார். அரிசி ஆலைக்கான திட்ட ஒப்புதல் பெற பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு மனு செய்தார். திட்ட ஒப்புதல் தர செயல் அலுவலர் (பொறுப்பு ) ஜானகிராமன் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை தர ராஜகோபால் விரும்பவில்லை.

இதையடுத்து அவர் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் கொடுத்த ஆலோசனைபடி நேற்று காலை ராஜகோபால் ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சத்துடன் பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அதை செயல் அலுவலர் ஜானகிராமன் சொன்னதன் பேரில் அலுவலக ஊழியர் பரந்தாமனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து செய்தனர்.

கைது செய்யப்பட்ட செயல் அலுவலர் ஜானகிராமன் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்