பெருந்துறை அருகே பிரபல கொள்ளையன் கைது; லட்சக்கணக்கான நகை –பணம் மீட்பு
பெருந்துறை அருகே காரில் வந்த பிரபல கொள்ளையனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து லட்சக்கணக்கான நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.;
பெருந்துறை,
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவன் மணிகண்டன் (வயது 41). பிரபல கொள்ளையன். இவன் மீது திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய போலீஸ் நிலையங்களில் 40–க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மணிகண்டனை 3 முறை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த பிறகும் மணிகண்டன் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் விடாமல் மணிகண்டனின் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. ஆனாலும் போலீசாரிடம் மணிகண்டன் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தான். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் மணிகண்டன் கைவரிசை காட்டியுள்ளான். இதைத்தொடர்ந்து மணிகண்டனை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தனிப்படை போலீசார் மணிகண்டன் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னலை வைத்து பிடிக்க தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மணிகண்டன் காரில் கோவை நோக்கி சென்றுகொண்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் கோவை போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கோவை செல்லும் வழியில் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களிலும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார்கள்.
அதன்படி பெருந்துறை பகுதியிலும் வாகன சோதனை நடைபெற்றது. பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ் உள்பட ஏராளமான போலீசார் பெருந்துறை சிப்காட் அருகே உள்ள லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல் பங்க் முன்பு நின்று கொண்டு அந்த வழியாக கோவை நோக்கி வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை தனிப்படை போலீசார் கூறிய அடையாளங்களுடன் ஒரு கார் அங்கு வந்தது. உடனே போலீசார் உஷார் அடைந்து அந்த காரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது காரை ஓட்டிவந்தது பிரபல கொள்ளையன் மணிகண்டன் என்பது போலீசாருக்கு தெரிந்தது. உடனே போலீசார் மணிகண்டனை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் மற்றும் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 6 செல்போன்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி வீடு புகுந்து திருடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் ஆகியவையும் அந்த காரில் இருந்தன. இதையடுத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், திருட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றையும் போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பிடிபட்ட மணிகண்டனை பெருந்துறை போலீசார், கோவை போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மணிகண்டன் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
மணிகண்டனிடம் இருந்து மீட்கப்பட்ட நகை மற்றும் வெள்ளிப்பொருட்களின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று தெரிகிறது. நகைகளை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்த பின்னரே நகைகளின் மொத்த மதிப்பு வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் பெருந்துறையில் சிக்கியது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.