மாவட்டத்தில் இருந்து புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஓசூர்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் பொருட்கள் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிவாரண உதவிகள் பெறப்பட்டு, பாதிக்கரீ;பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் வியாபாரிகள் சங்கம் சார்பில் 300 பெட்சீட், தீப்பெட்டிகள் உள்பட பொருட்கள் ரூ.1 லட்சம் மதிப்பில் பொருட்களும், கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கம், மெட்ரோ பஜார், தமிழ்நாடு திருமண மண்டபம், ரோட்டரி சங்கம்- கிருஷ்ணகிரி, நாளந்தா மெட்ரிக் பள்ளி உள்பட பல நிறுவனங்களிலிருந்து அரிசி, பருப்பு, போர்வை, தீப்பெட்டி, கொசுவர்த்தி, துணி வகைகள், நாப்கின், பிஸ்கட், சமையல் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பாத்திரங்கள், பால் பவுடர், குளுக்கோஸ், மருந்து வகைகள் உள்பட 30 வகையாக பொருட்கள் ரூ.24 லட்சத்து 56 ஆயிரத்து 605 மதிப்பில் 2 லாரிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகரன் ரூ. 11 லட்சம் மதிப்பிலான காசோலையும், ரூ. 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் வழங்கினார். இதேபோல், அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பாக ரூ.81 ஆயிரம் மதிப்பில் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பாட்டில்களை கலெக்டரிடம் நிறுவன பிரதிநிதிகள் ராகவன், வெங்கட், ரவிசந்திரன் ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் ரூ.2 லட்ச மதிப்பிலான அரிசி. எண்ணெய், குடிநீர் பாட்டில்கள், துணிகள், குடம், மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, நாப்கின், கொசுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்த நிவாரண உதவி பொருட்கள், மினி லாரியில் ஏற்றி திருவாரூர் பகுதிக்கு அனுப்பப்பட்டது. ஓசூர் உதவி கலெக்டர் அலுவலத்திலிருந்து நிவாரண உதவி பொருட்களை ஏற்றிக்கொண்டு, புறப்பட்ட இந்த வாகனத்தை, உதவி கலெக்டர் விமல்ராஜ் கொடி யசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 168 மூட்டை அரிசி, 350 கிலோ பருப்பு, 25 பெட்டி பிஸ்கட், தீரன்சின்னமலை பள்ளியின் சார்பில் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை என ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 500- க்கான நிவாரண பொருட்களை திருவாரூர் மாவட்டத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், வேடியப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், கருணாகரன், பிரசன்னா, மணி மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பொருட்டு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆபிதா பேகம், சுந்தரபாஸ்கர் ஆகியோர் தலைமையில், ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி, எண்ணெய், குடிநீர் பாட்டில்கள், காய்கறிகள், துணிமணிகள், மெழுகு வர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் இந்த நிவாரண பொருட்கள், லாரி மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டியில் பொதுமக்கள், வணிகர்கள், ஆசிரியர்கள் உதவியால் 40 மூட்டை அரிசி, தக்காளி, போர்வை, கொசுவலை, நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன.