மொரப்பூர் அருகே நிமோனியா காய்ச்சலுக்கு குழந்தை பலி

மொரப்பூர் அருகே நிமோனியா காய்ச்சலுக்கு 1 வயது ஆண் குழந்தை பலியானது.

Update: 2018-11-23 17:48 GMT
மொரப்பூர், 

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கெலவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகன் யோகித் (வயது 1). கடந்த சில நாட்களாக யோகித்துக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

இதைத் தொடர்ந்து யோகித்தை அவருடைய பெற்றோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் யோகித்துக்கு காய்ச்சல் அதிகமாக காணப்பட்டது. அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் யோகித் பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே டெங்கு காய்ச்சலுக்கு யோகித் பலியானதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து அறிந்த உதவி கலெக்டர் சிவன் அருள், தாசில்தார் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், மகாலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் அரசு மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்றனர். பின்னர் யோகித் நிமோனியா காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். நிமோனியா காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்