அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-11-23 23:30 GMT
திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அந்த மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

உலகப்புகழ் பெற்ற இந்த தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வீதி உலா நடைபெற்றது.

இதையடுத்து 2-வது நாளில் இருந்து காலையில் விநாயகரும், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி ரதம் 19-ந் தேதியும், பஞ்சரத தேரோட்டம் 20-ந் தேதியும் நடைபெற்றது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்களால் இழுக்கப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று மாலை 6 மணிக்கு நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

முன்னதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது சாமி சன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்தது. பரணி தீபத்தை தரிசிப்பதற்காக மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர். அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும் பரணி தீபம் ஏற்றுவதற்கான பூஜை தொடங்கியது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து சரியாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதில் இருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்காக பரணி தீபம் வெளியே கொண்டு வரப்பட்டது.

பரணி தீபத்தை கண்டதும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் கூட்டத்தின் நடுவே பரணி தீபம் கோவில் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது.

பின்னர் அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அம்மன் சன்னதி மற்றும் சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணி தீபம் கொண்டு வரப்பட்டு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். இதனால் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தில் காட்சி அளித்தது. நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த பக்தர்கள், கிரிவலம் சென்ற பக்தர்கள், திருவண்ணாமலை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் மகா தீபத்தை காண மலையை நோக்கி காத்திருந்தனர். மாலை 5.10 மணிக்கு மேல் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆடியபடி வந்து தீப மண்டபத்தில் தங்க விமானத்தில் காட்சி அளித்தனர்.

மாலை 6 மணி அளவில் சாமி சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளித்து சென்றதும் சாமி சன்னதி முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

உடனே கோவிலில் இருந்த பக்தர்கள், கிரிவலம் சென்ற பக்தர்கள் மலையை நோக்கி அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் மகா தீபத்தை வணங்கினர். வீடுகளில் இருந்த பக்தர்கள் தங்கள் வீட்டு மாடியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினர்.

மகா தீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பட்டாசு, வாண வெடிகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்கு ஏற்றினர். அனைத்து வீடுகளின் முன்பும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதால் திருவண்ணாமலை நகரம் ஒளிவெள்ளமாக காட்சி அளித்தது. மகா தீபம் ஏற்றிய பிறகே திருவண்ணாமலை மற்றும் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் மின் விளக்குகளை எரியச் செய்தனர்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழ்நாடு வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

26-ந் தேதி (திங்கட்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்