கார்த்திகை தீபத்திருவிழா: குதிரை, மாட்டுச்சந்தை களைகட்டியது ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடந்த குதிரை, மாட்டு சந்தையில் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவையொட்டி தேரோட்டத்தின் போது திருவண்ணாமலையில் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக குதிரை சந்தை, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான குதிரை, மாட்டு சந்தை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த சந்தை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடலில் நடைபெற்று வருகிறது.
குதிரை சந்தைக்காக திருவண்ணாமலை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காட்டுவாடி, நாட்டு குதிரை, குவேத் உள்பட ஏராளமான குதிரை வகைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.
அதேபோல் மாட்டு சந்தையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
நேற்று நடந்த மாட்டு, குதிரை சந்தையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானோர் வந்திருந்து மாடு, குதிரைகளை வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் வியாபாரம் களை கட்டியது.
மேலும் இந்த சந்தைக்கு அருகில் மாடு மற்றும் குதிரைக்கு கட்டுவதற்கு தேவையான மணிகள், கயிறுகள் விற்பனை செய்வதற்காக ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
நேற்று மழை விட்டு விட்டு பெய்து கொண்டு இருந்தது. இதனால் சந்தையில் இருந்த மாடுகள் மற்றும் குதிரைகள் மழையில் நனைந்தபடி நின்றன. கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கால்நடை மருத்துவ முகாமும் நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் குதிரை மற்றும் மாடுகளை வாங்கி சென்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான மக்கள் இந்த சந்தையை நேரில் வந்து பார்வையிட்டனர்.