வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை மனு

வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டுத்தருமாறு கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு கொடுத்தார்.

Update: 2018-11-23 22:45 GMT
வேலூர், 

ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கடந்த 14 ஆண்டுகளாக அரபு நாட்டில் உள்ள மஸ்கட்டில் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது ஆண்டிற்கு ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஊருக்கு வந்துவிட்டு சென்றார். தினமும் போன் மூலம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பேசிவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் இறந்துவிட்டதாக அவருடைய மனைவி நந்தினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிவிக்கவில்லை. இதனால் நந்தினி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து 2 நாட்களாகியும் தனது கணவர் பற்றி சரியான தகவல் கிடைக்காததால் நந்தினி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணனிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், தனது கணவர் கடந்த 14 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே வெளிநாட்டில் உள்ள எனது கணவரின் உடலை இந்திய தூதரகம் மூலம் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்