மதுரை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் சிக்கினர்
மதுரை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது. அந்த தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் சிக்கினர்.
மதுரை,
கொழும்புவில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அகமது அன்சாரி (வயது 36), முகமது ரியாஸ் (28) ஆகியோரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள், தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கொண்டு வந்த பெட்டியில் தங்கம் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், அவர்கள் கொண்டு வந்த பெட்டியை சோதனை செய்தபோது, களிமண் பொருளுடன் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தங்கத்தை கடத்தி வந்த அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிக்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.42 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மதுரை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் கடத்தல் சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. தங்கம் கடத்தல் சம்பவத்தை முற்றிலும் தடுப்பதற்கு பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் விமானத்தில் பயணித்தால் சுங்கத்துறை அதிகாரிகளிடம் உடனடியாக கூற வேண்டும்“ என்றார்.