மாணவியை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் கைது பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்ததால் போலீஸ் நடவடிக்கை
தான் பக்கத்து வீட்டு ஆட்டோ டிரைவரால் மானபங்கம் செய்யப்பட்டதை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி ஒருத்தி கூறினாள். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தான் பக்கத்து வீட்டு ஆட்டோ டிரைவரால் மானபங்கம் செய்யப்பட்டதை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி ஒருத்தி கூறினாள். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி குழந்தைகள் மானபங்கம் செய்யப்படுவது மற்றும் கற்பழிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகளில் போலீசார் ‘குட் டச், பேடு டச்' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மும்பை அந்தேரி டி.என். நகர் போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள ஒரு பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இதில், பாலியல் துன்புறுத்தலில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பது குறித்து பெண் போலீசார் மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
ஆட்டோ டிரைவர் கைது
அப்போது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த 13 வயது மாணவி ஒருத்தி போலீசாரிடம், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு தாஸ்(வயது30) என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவியை அழைத்துக்கொண்டு வெர்சோவா போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியை மானபங்கம் செய்ததாக கூறப்படும் பாபு தாசை கைது செய்தனர். விசாரணையில், அவர் ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.