முதல்- மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு விவசாயிகள் போராட்டம் வாபஸ்
முதல்-மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் நடந்த போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.
மும்பை,
முதல்-மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் நடந்த போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.
விவசாயிகள் பேரணி
மராட்டியத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், மும்பை- நாக்பூர் விரைவு சாலை மற்றும் புல்லட் ரெயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக லோக் சங்கர்ஷ் மோர்ச்சா என்ற அமைப்பு நேற்றுமுன்தினம் விவசாயிகளை திரட்டி மும்பை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்தியது.
இதில், பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகள் ஆவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே நிலவுரிமை கோரிக்கையை வலியுறுத்தி இப்பேரணியில் விவசாயிகள் பங்கேற்றனர்.
மும்பையில் போராட்டம்
இதற்காக தானே நகரில் ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள் மும்பையை நோக்கி நடைபயணமாக வந்தனர். விவசாயிகள் பேரணி நேற்று முன்தினம் இரவு சயான் சுன்னாப்பட்டி மைதானத்தை வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் தங்கி ஓய்வெடுத்தனர்.
இதையடுத்து நேற்று காலை அவர்கள் பேரணியாக மும்பை ஆசாத் மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆசாத் மைதானம் சென்றடைந்த அவர்கள் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினர். சட்டசபை அருகே திரண்டு போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆனால் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் அமர்ந்து அமைதியான முறையில் தங்களது கோரிக்கை குறித்த முழக்கங்களை எழுப்பினார்கள்.
போராட்டம் வாபஸ்
இந்தநிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். இதையடுத்து பிற்பகலில் லோக் சங்கர்ஷ் மோர்ச்சா அமைப்பின் பிரதிநிதிகள் முதல்-மந்திரியை சந்தித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்த மாதத்திற்குள் (டிசம்பர்) பழங்குடியின விவசாயிகளின் நிலவுரிமை கோரிக்கைக்கு தீர்வு காண்பதாக முதல்-மந்திரி உறுதி அளித்தார்.
முதல்-மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இரவு விவசாயிகள் தங்களது போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து அனைவரும் அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.