புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் நிவாரண பொருட்கள் கமல்ஹாசன், 60 லாரிகளில் அனுப்பி வைத்தார்

புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கான நிவாரண பொருட்களை 60 லாரிகளில் தஞ்சையில் இருந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.

Update: 2018-11-22 23:15 GMT
தஞ்சாவூர்,

கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் 60 லாரிகளில் நிவாரண பொருட்கள் தஞ்சையில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார். பின்னர் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் லாரி டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோரை அழைத்து பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும்படி கூறினார்.

தஞ்சை, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிவாரண பொருட்களை எடுத்து வந்த மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்களை அழைத்து, சேதமடைந்த பகுதிகளை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.60 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் 60 லாரிகளில் நிவாரண பொருட்கள் தஞ்சையில் இருந்து இன்று(நேற்று) அனுப்பப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதித்த பகுதிகளை நான் நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளேன். கஜா புயலின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் செயலில் தான் ஈடுபடும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து நிவாரணம் கேட்டுள்ளார். புயலால் பாதித்த பகுதிகளை முழுமையாக பார்வையிட்ட பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண தொகையை கேட்டிருக்க வேண்டும்.

புயலால் பாதித்த பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லவில்லை. எனவே அரசு அதிகாரிகள் எல்லா கிராமங்களுக்கும் சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புயலால் பாதித்த பகுதிகளில் அரசு மட்டுமே மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாது. கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் மக்கள் நீதி மய்யம் செய்கிறது. யார் அழைத்தாலும் அவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்த்து நின்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து நிவாரண பொருட்கள் எடுத்து செல்லும் லாரிகளை பின் தொடர்ந்து கமல்ஹாசன் சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்