கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
கர்நாடகத்தில் தெருவோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தெருவோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
கர்நாடக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ஏழை களின் தோழன் (படவர பந்து) என்ற திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
அடையாள அட்டை
இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விழாவில் குமாரசாமி பேசியதாவது:-
கர்நாடகத்தில் 4½ லட்சம் தெருவோர வியாபாரிகள் உள்ளனர். இதில் பெங்களூரு மாநகராட்சியில் 80 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த தெருவோர வியாபாரிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
கந்துவட்டியை ஒழிக்க...
கர்நாடகத்தில் இதுவரை 1.80 லட்சம் பேருக்கும், பெங்களூரு மாநகராட்சியில் 24 ஆயிரத்து 650 பேருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மகளிர் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும்.
இந்த கடனை 3 மாதத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும். இந்த கடனை சரியான முறையில் திரும்ப ெசலுத்தும் வியாபாரிகளுக்கு அடுத்த முறை கூடுதலாக 10 சதவீதம் கடன் வழங்கப்படும். கந்து வட்டியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கடன் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
53 ஆயிரம் வியாபாரிகளுக்கு...
இந்த ஆண்டில் 53 ஆயிரம் வியாபாரிகளுக்கு கடன் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி மற்றும் இதர நகர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தெருவோர வியாபாரிகள் இந்த கடன் திட்டத்தில் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ஆட்சி மன்ற குழு, கடன் வழங்கும் வங்கிகள் இந்த திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்யும். வங்கிகள் இந்த கடன் தொகையை வசூலிக்க ஊழியர்களை நியமித்துக்கொள்ளலாம் இந்த கடனுக்கான வட்டியை 3 மாதத்திற்கு ஒரு முறை. மாநில அரசே வங்கிகளுக்கு நேரடியாக செலுத்தும்.
யார்-யார்
தகுதி படைத்தவர்கள்?
கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துகொண்டு, வியாபாரிகளை மிரட்டி கந்துவட்டி வசூலித்து வந்த ரவுடிகளுக்கு இதன் மூலம் கடிவாளம் போடப்படும்.
இந்த திட்டத்தில் தள்ளுவண்டி, மோட்டார் வாகனங்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்பவர்கள், வாகனங்களில் ஓட்டல் நடத்துபவர்கள், வீடு வீடாக சென்று காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்பவர்கள், துணி வியாபாரிகள், காலணி விற்பவர்கள், விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
அதே நேரத்தில் சாலைகளில் தூய்மையை கெடுப்பவர்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்குபவர்கள் கடன் பெற தகுதி அற்றவர்கள் ஆவார்கள். இந்த கடன் திட்டத்தை தெருவோர வியாபாரிகள் சரியான முறையில் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.