பெங்களூருவில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட 3-வது மெட்ரோ ரெயில் சேவை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்

கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட 3-வது மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.;

Update: 2018-11-22 22:30 GMT
பெங்களூரு, 

கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட 3-வது மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

கூடுதலாக 3 பெட்டிகள்

பெங்களூருவில் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. மைசூரு ரோடு-பையப்பனஹள்ளி மற்றும் நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3 பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில் இயங்குகிறது. இதில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி ஏற்கனவே 2 ரெயில்களுக்கு கூடுதலாக தலா 3 பெட்டிகள் இணைக்கப்பட்டன. அந்த ரெயில்கள் 6 பெட்டிகளுடன் ஓடுகின்றன.

முதல்-மந்திரி குமாரசாமி

இந்த நிலையில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட 3-வது மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு, மெட்ரோ ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் மெட்ரோ ரெயிலுக்கும், கடந்த அக்டோபர் 4-ந் தேதி 2-வது மெட்ரோ ரெயிலுக்கும் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்ன. இன்று(நேற்று) 3-வது மெட்ரோ ரெயிலுக்கு கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, அதன் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

15 சதவீதம் அளவுக்கு...

4-வது மெட்ரோ ரெயிலுக்கு கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களில் அதன் சேவையும் தொடங்கி வைக்கப்படும். தற்போது பையப்பனஹள்ளி மற்றும் மைசூரு ரோடு இடையே ஓடும் ரெயில்களுக்கு இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே ஓடும் ரெயிலுக்கும் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 6 பெட்டிகளுடன் ரெயில்கள் ஓடுவதால் 15 சதவீதம் அளவுக்கு மின்சாரம் மிச்சமாகிறது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

19 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள்

மெட்ரோ ரெயில் கழக நிறுவன இயக்குனர் அஜய்சேட் கூறியதாவது:-

பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு இடையே வணிக நிறுவன பகுதிகள் அதிகமாக உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதிளில் 19 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள். அதனால் தான் இந்த பாதையில் கூடுதல் பெட்டிகள் இணைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

3 பெட்டி ரெயிலில் 750 பேரும், 6 பெட்டி ரெயிலில் 1,574 பேரும் பயணிக்க முடியும். நெருக்கடியுடன் பயணம் செய்தால், ஒரே ரெயிலில் 2,000 பேர் பயணம் செய்யலாம். அடுத்த ஆண்டு(2019) ஆகஸ்டு மாதத்திற்குள் அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அஜய்சேட் கூறினார்.

இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மேயர் கங்காம்பிகே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்