பிரதமர் மோடி மிக மோசமான ஆட்சியை நடத்தி வருகிறார் தேவேகவுடா கடும் தாக்கு

பிரதமர் மோடி மிக மோசமான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று தேவேகவுடா கடுமையாக தாக்கினார்.

Update: 2018-11-22 23:15 GMT
பெங்களூரு, 

பிரதமர் மோடி மிக மோசமான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று தேவேகவுடா கடுமையாக தாக்கினார்.

அதிக அனுபவம் பெற்றவர்

பல்லாரி நாடாளுமன்ற தொகுதி உள்பட 5 தொகுதிகளுக்கு கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பல்லாரி உள்பட 4 தொகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பல்லாரியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் இடைத்தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா, முதல் முறையாக பல்லாரியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாைக சூடி இருக்கிறார். உக்ரப்பா அதிக அனுபவம் பெற்றவர்.

பா.ஜனதாவை அகற்ற வேண்டும்

இந்த தொகுதியில் பா.ஜனதா 18 ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்தது. இப்போது அது காங்கிரஸ் வசம் வந்துவிட்டது. இந்த தொகுதியின் பொறுப்பாளராக மந்திரி டி.கே.சிவக்குமார் சிறப்பான முறையில் செயல்பட்டார். கர்நாடகத்தில் நாயக் சமூகத்ைத பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உக்ரப்பா அரும்பாடுபட்டார்.

மத்தியில் இருந்து பா.ஜனதாவை அகற்ற வேண்டும். இந்த ஆட்சியில் குஜராத்தில், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களின் உடையை அகற்றிவிட்டு நிர்வாணமான முறையில் தாக்கினர். உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

நாட்டை காப்பாற்ற வேண்டும்

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள், ஆட்சி அதிகாரத்திற்காக ஒன்று சேரவில்லை. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். அரசின் முக்கியமான நிறுவனங்களை பா.ஜனதா தவறான முறையில் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள். இவற்றை தடுக்கவே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.

மத்தியில் பிரதமர் மோடி, மிக மோசமான ஆட்சியை நடத்தி வருகிறார். ராகுல் காந்தி, குறைந்த வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுள்ளார். அவரது தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

மேலும் செய்திகள்