சர்க்கரை ஆலை அதிபர்களுடன் அரசு பேச்சுவார்த்தை கரும்புக்கான ஆதரவு விலை டன்னுக்கு ரூ.300 உயர்வு

கர்நாடக அரசு கரும்பு விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக சர்க்கரை ஆலை அதிபர்களுடன் பெங்களூருவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

Update: 2018-11-22 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசு கரும்பு விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக சர்க்கரை ஆலை அதிபர்களுடன் பெங்களூருவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கரும்புக்கான ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.300 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு கரும்புக்கான ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2,950 என்று நிர்ணயம் செய்துள்ளது.

கரும்பு விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் வட கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து விவசாயிகள் அவரது உருவ பொம்மையை எரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி சுவர்ணசவுதாவுக்குள் கரும்பு லாரிகளுடன் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெலகாவியை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, குமாரசாமி, முதல்-மந்திரி பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தினார். இதை கண்டித்த குமாரசாமி, அந்த பெண் விவசாயிக்கு பதில் அளித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது.

சர்க்கரை ஆலை அதிபர்கள்

இதை கண்டித்து கரும்பு விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். மேலும் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவை முற்றுகையிட ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். மேலும் பாகல்கோட்டை, பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து குமாரசாமி பேசினார். பெண் விவசாயி பற்றி தான் பேசிய பேச்சை குமாரசாமி வாபஸ் பெற்றார். அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் சர்க்கரை ஆலை அதிபர்கள் கூட்டம் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்த பட்டீல், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், சர்க்கரை ஆலை அதிபர்கள் தரப்பில் சதீஸ் ஜார்கிகோளி, பாலச்சந்திர ஜார்கிகோளி, எஸ்.ஆர்.பட்டீல், முருகேஷ் நிரானி, உமேஷ்கட்டி உள்பட 31 பேர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

கரும்பு வெட்டும் கூலி

இதில் பேசிய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினர். அதற்கு, முதல்-மந்திரி, கரும்பு விவசாயிகளுக்கு சரியான விலையை கொடுக்க வேண்டும் என்றும், உரிய விலை கிடைக்காதபோது, அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவது இல்லை என்றும் கூறினார்.

பாகல்கோட்டையை சேர்ந்த சர்க்கரை ஆலை அதிபர்கள், விவசாயிகளுக்கு கரும்பு வெட்டும் கூலி ரூ.650 கழித்துக் கொண்டு டன்னுக்கு ரூ.2,250 வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

ஆதரவு விலை ரூ.300 உயர்வு

அதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் கரும்புக்கான ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.300 வீதம் உயர்த்்தி வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கர்நாடக அரசு சார்பில் ரூ.150-ம், சர்க்கரை ஆலை அதிபர்கள் சார்பில் ரூ.150-ம் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தகவலை மாநில அரசு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்த ஆதார விலையை வழங்க ஆலை அதிபர்கள் சிலர் தங்களின் ஒப்புதலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்த அறிவிப்பை மாநில அரசு உடனடியாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்