சத்தி அருகே வேன் கவிழ்ந்தது அய்யப்ப பக்தர்கள் 22 பேர் காயம்
சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 22 பேர் காயம் அடைந்தனர்.
சத்தியமங்கலம்,
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 22 பேர் கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை அதே பகுதியை சேர்ந்த கேசவன் (வயது 28) என்பவர் ஓட்டினார்.
இந்த வேன் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தது. பின்னர் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் கோபி பச்சைமலை மற்றும் பவளமலை பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் வந்தனர். அங்கிருந்து கோவை சென்று பின்னர் சபரிமலை செல்ல முடிவு செய்தனர்.
நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி வேன் சென்று கொண்டு இருந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் கேசவன் மற்றும் வேனில் வந்த அய்யப்ப பக்தர்கள் 22 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த கேசவன், தர்மன் (34), காமராஜ் (38), ஏழுமலை (35), பாபு (36), சூர்யா (10), பிரவின் (6), பெருமாள் (33), சிவக்குமார் (30) உள்பட 12 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்துக்குள்ளான வேன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.