சேலம் சின்னக்கடை வீதியில் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 வீடுகளுக்கு ‘சீல்’
சேலம் சின்னக்கடை வீதியில் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 வீடுகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
சேலம்,
சேலம் சின்னக்கடை வீதி அரசமரம் பிள்ளையார் கோவில் தெருவில் சென்னப்பர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள இடத்தில் 5 பேர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். சென்னப்பர் கோவில் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் செயல் அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்த பிரச்சினை தொடர்பாக சேலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருபவர்களை அகற்றுமாறு சேலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க சென்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வந்ததும் ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்தவர்கள் தங்களது உடைமைகளை அங்கிருந்து அப்புறப்படுத்திக்கொண்டனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 5 வீடுகளுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவில் நிலத்தில் சின்னக்கடைவீதி பகுதியை சேர்ந்த சரசு, செல்லம்மாள், குபேந்திரன், பழனி, விஜயா ஆகிய 5 பேர் சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமித்து வீடு கட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இதற்கு எந்தவிதமான வாடகையும் செலுத்தாமல் உள்ளனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோவிலில் விமானம் அமைக்கும் பணி மற்றும் மண்டப திருப்பணி வேலைகளுக்கு தேவைப்படுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கள் 5 பேரும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் 5 பேரிடமும் வீடுகளை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 15 நாட்களுக்குள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. எனினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தான் நேற்று 5 வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.