சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்: கேரள அரசை கண்டித்து குமரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம்

சபரிமலை சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கேரள அரசை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடப்படும் என்று பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

Update: 2018-11-22 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல் இருக்கிறது. பக்தர்களை சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். பக்தர்களை கோவிலில் தங்க விடுவது இல்லை. சரண கோஷம் போடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வாகனங்களை நிலக்கல்லை தாண்டிச் செல்ல அனுமதி அளிக்கப்படுவது இல்லை. கேரள அரசின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியது.

மேலும் பாரம்பரிய முறைப்படி இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை நிலக்கல்லில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அரசு பஸ்சில் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். பக்தர்களின் வாகனங்களை ஏன் தடுக்கிறீர்கள் என்று போலீசாரிடம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டார். அப்போது மண் சரிவு, கூட்ட நெரிசல் என்று சாக்குபோக்கு சொல்கிறார்கள். மேலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் அவதூறாகவும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் பேசினார்கள். எனவே மனிதநேயமற்ற முறையில் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் கேரள அரசை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப் படுகிறது.

வாகனங்கள் இயங்காது

முழு அடைப்பு போராட்டமானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். இந்த நேரத்தில் கடைகள் திறக்கப்படாது. ஆட்டோக்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காது. இந்த போராட்டத்துக்கு பொதுமக்களும், வியாபாரிகளும், வர்த்தகர்களும் மற்றும் வாகன தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்டித்து நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். தக்கலையில், பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் அந்த வழியாக சென்ற 4 கேரள அரசு பஸ்களை சிறைபிடித்தனர். மேலும், களியக்காவிளையில் 3 கேரள பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் கேரள அரசு பஸ்கள் மாவட்டத்தின் எல்லையான இஞ்சிவிளையில் நிறுத்தப்பட்டன. அதுபோல் திருவனந்தபுரம் சென்ற தமிழக பஸ்களும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

பா.ஜனதா கட்சியினரின் போராட்டம் காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். எல்லை பகுதியில் நேற்று 2-வது நாளாக பதற்றம் நிலவியது. இதனால், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்ட தமிழக பஸ்கள் அதிகாலையில் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.

மேலும், கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் கேரள பஸ்களும் அந்த மாநில எல்லையான இஞ்சிவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மற்றும் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். அதன்பிறகு காலை 9.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழக பஸ்கள் கேரளாவுக்கு இயக்கப்பட்டன. அதுபோல் கேரள பஸ்களும் குமரி மாவட்டம் வந்தன.

குமரி- கேரளா இடையே பஸ் போக்குவரத்து தாமதமானதால் நேற்று அதிகாலையில் கேரளாவுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்