2-வது நாளாகவும் நீடித்த தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாகவும் மழை நீடித்தது. தொடர் மழை காரணமாக சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2018-11-22 23:00 GMT
வேலூர், 

தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை தொடர்ந்து இரவு வரை பெய்தது. இந்த மழை நேற்று 2-வது நாளாகவும் தொடர்ந்தது.

சில நேரங்களில் சாரல் மழை போன்றும் சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டமின்றி வேலூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியில் சென்ற பொதுமக்கள் குடைபிடித்தும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் மழையையும் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் செயல்பட்டன. இதனால் பள்ளிக்கு சென்ற சில மாணவ - மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

தொடர் மழையால் வேலூர் சூரியகுளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரும் புகுந்தது. தெருவிலும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோன்று சேண்பாக்கம் ராகவேந்திரா நகரில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகப்பட்சமாக ஆற்காடு பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துள்ள மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆற்காடு -50, வேலூர் - 36.4, அரக்கோணம் - 33.2, வடபுதுப்பட்டு - 26.4, காவேரிப்பாக்கம் - 25, காட்பாடி - 25, அம்முண்டி - 24, மேலாலத்தூர் - 22.8, வாலாஜா - 21.6, ஆலங்காயம் - 20.5, குடியாத்தம் - 19.5, வாணியம்பாடி - 16.3, சோளிங்கர் - 13, ஆம்பூர் - 10.2.

மேலும் செய்திகள்