தானேயில் திரண்டு ஆயிரக்கணக்கானோர் நடைபயணமாக வந்தனர் மும்பையில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தானேயில் திரண்டு மும்பைக்கு விவசாயிகள் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினார்கள்.
மும்பை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தானேயில் திரண்டு மும்பைக்கு விவசாயிகள் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இன்று சட்டசபை அருகில் போராட்டம் செய்ய போவதாக அறிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கில் இருந்து மும்பைக்கு கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டசபையை நோக்கி விவசாயிகள் நடத்திய பிரமாண்ட பேரணி மாநிலத்தையே உலுக்கியது.
விவசாயிகள் போராட்டம்
தற்போது, மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தநிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், மும்பை- நாக்பூர் விரைவு சாலை மற்றும் புல்லட் ரெயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகளை திரட்டி மும்பையில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என்று லோக் சங்கர்ஷ் மோர்ச்சா என்ற அமைப்பு அறிவித்தது.
இதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பு செய்தது. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களை திரட்டியது.
பேரணியாக புறப்பட்டனர்
அவர்கள் அனைவரும் நேற்று காலை முதலே தானே நகரில் திரண்டார்கள். இவர்களில் ஏராளமானவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மரத்வாடா, புசவல் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மதியம் அங்கிருந்து மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாத ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்திக்கொண்டு தங்களது கோரிக்கை குறித்த கோஷங்களை எழுப்பியபடி நடைபயணமாக மும்பையை நோக்கி வந்தனர்.
ஆங்காங்கே சாலைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். விவசாயிகளின் பேரணி மாலை மும்பை பெருநகரத்துக்குள் நுழைந்தது.
போக்குவரத்து பாதிப்பு
கிழக்கு விரைவு சாலை வழியாக விவசாயிகள் மாலை மும்பைக்குள் அடியெடுத்து வைத்தனர். முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், செம்பூர் வழியாக வந்தனர். இதன் காரணமாக கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவசாயிகளின் பேரணி இரவு சயான் சுன்னாப்பட்டி மைதானத்தை வந்தடைந்தது.
அங்கு விவசாயிகள் தங்கி ஓய்வு எடுத்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மும்பையை வந்தடைந்து உள்ள விவசாயிகள் இன்று சட்டசபை அருகே திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக அதிகாலையிலேயே தென்மும்பை நோக்கி அவர்கள் பேரணியாக செல்கிறார்கள்.
இதையொட்டி சட்டசபை உள்ள நரிமன்பாயிண்ட் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சட்டசபையை நெருங்க விடாமல் பேரணியை தடுத்து நிறுத்தும் முனைப்புடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.