கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

Update: 2018-11-21 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் அரியலூர் மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் கிளப், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் நகர வியாபாரிகள் இணைந்து ரூ.5 லட்சம் நிவாரண பொருட்களை, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு, ஜெயங்கொண்டத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். முதல் கட்ட நிவாரணமாக சோலார் லைட்டுகள், பற்பசை, பிரஷ், போர்வை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், பிரட் மற்றும் ரஸ்க் போன்ற உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை அனுப்பப்பட்டன. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பேராவூரணி, அதிராமபட்டினம், வடசேரி உள்ளிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 90 கே.வி. திறனுடைய 3 நடமாடும் ஜெனரேட்டர்களும், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் வினியோகம் செய்ய டேங்கர் லாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நடமாடும் ஜெனரேட்டர்கள் 10 கிராமங்களுக்கு 10 நாட்கள் சேவையை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜெனரேட்டர்கள் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்கள், மின்சார விளக்குகள் போன்றவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த நிவாரண குழுவில் ஜெயங்கொண்டம் நகர சோழன் சிட்டி லயன்ஸ் கிளப் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர்கள் டாக்டர் கருப்பையா, ரமேஷ்குமார், வெங்கடேஸ்வரா குப்தா, முத்துகுமார் மற்றும் பலர் இணைந்து செய்தனர்.

மேலும் செய்திகள்