மானாமதுரை பகுதியில் வைகை பாசன கால்வாய்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

மானாமதுரை பகுதியில் உள்ள வைகை பாசன கால்வாய்களில் உள்ள ‌ஷட்டர்களை விவசாயிகள் திறக்காமல் இருக்க அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2018-11-21 23:00 GMT

மானாமதுரை,

ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக கடந்த 14–ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் 7 நாட்களுக்கு ராமநாதபுரத்திற்கும், 2 நாட்கள் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் 4 நாட்கள் சிவகங்கை மாவட்டத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் தண்ணீர் போக மீதமுள்ள மழைநீரை சிவகங்கை மாவட்ட கால்வாய்களில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் வறண்ட நிலையில் உள்ள கண்மாய்களை நிரப்பவும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு நாள் மட்டும் சிவகங்கை மாவட்ட கால்வாய்களில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட அளவை விட கூடுதல் தண்ணீர் செல்வதால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனையடுத்து விவசாயிகள் ‌ஷட்டர்களை திறக்காமல் இருக்க பாசன கால்வாய்களின் ‌ஷட்டர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மானாமதுரை அருகே கட்டிக்குளம், மிளகனூர், கீழப்பசலை உள்ளிட்ட வைகை பாசன கால்வாய்களில் பொதுப்பணித்துறை சார்பில் அங்கு குடிசை அமைக்கப்பட்டு பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு நாளை(வெள்ளிக்கிழமை) வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தண்ணீர் சென்றுள்ளது. அதிகாரிகள் தண்ணீர் வடியும் வகையில் 3 நாட்களுக்கு கால்வாயில் உள்ள ‌ஷட்டர்களை அடைத்து வைத்துள்ளனர். அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட உடன் இந்த கால்வாயில் உள்ள ‌ஷட்டர்களை திறந்து விவசாயத்திற்கு உதவ அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்