கோவை மாநகர பகுதியில்: செல்போன் பறிப்பை தடுக்க தனிப்படை - போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தகவல்
கோவை மாநகர பகுதியில் செல்போன் பறிப்பை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாநகர பகுதியில் கொள்ளை, திருட்டு, நகை, செல்போன் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக போலீசார் ரோந்து செல்லும் நேரத்தையும் அதிகப்படுத்தி மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
போலீசார் ரோந்து செல்வது தீவிரப்படுத்தப்பட்டதால் நகை பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால் செல்போன் பறிப்பு அதிகரித்து விட்டது. முக்கியமாக காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில்தான் செல்போன் பறிப்பு சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகம் அருகே சில நாட்களுக்கு முன்பு பஸ்சுக்காக காத்து நின்ற ஒரு போலீஸ்காரரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்துவிட்டு சென்றனர். செல்போனை பறிகொடுப்பவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுப்பது மிகக்குறைவுதான்.
இதனால் செல்போன் பறிக்கும் மர்ம ஆசாமிகளின் எண்ணிக்கை சத்தம் இல்லாமல் உயர்ந்து வருகிறது. இதை தடுக்க தற்போது போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரிடம் செல்போனை பறித்த மர்ம கும்பல் அதை விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரப்படுத்தி உள்ளது. அதை அந்த செல்போனை பறிகொடுத்தவர் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பேரில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் பல இடங்களில் செல்போன்களை பறித்தது தெரிந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்று செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடப்பதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மாநகர பகுதியில் உள்ள பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் செல்போனை பறிகொடுத்தவர்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையங்களுக்கு செல்லும்போது அவர்களை அலைக்கழிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே செல்போனை பறிகொடுத்தவர்கள் தாராளமாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் தெரிவிக்கலாம். அப்போது அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணுடன் புகார் கொடுக்க வேண்டும். அந்த புகாரை வாங்க மறுக்கும் போலீசார் குறித்து தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.