சேலம் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை கலெக்டர் தகவல்

சேலத்தில் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

Update: 2018-11-21 23:00 GMT
சேலம், 

சேலம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், சேலம் புத்தக வாசிப்போர் இயக்கம் சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் முதலாவது புத்தக திருவிழா நடைபெற்றது. 120-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு கோடிக்கும் மேலான புத்தகங்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், புத்தகம் வாசிப்பாளர்கள், பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் வந்து புத்தக திருவிழவை கண்டுகளித்தனர். இதையொட்டி நேரு கலையரங்கத்தில் பல்வேறு தலைப்புகளில் தினமும் சிறப்பு சொற்பொழிவு, பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 13 நாட்களாக நடைபெற்று வந்த இந்த புத்தக திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். செம்மலை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

சேலம் மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக சேலத்தில் மாபெரும் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. 10 சதவீத தள்ளுபடியில் புத்தகம் விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமானோர் வாங்கி சென்றுள்ளனர். குழந்தைகளுக்கான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்ககள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள், சரித்திர சமூக நாவல்கள் என ஏராளமான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இப்புத்தக திருவிழாவில் ரூ.10 முதல் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தேவையான புத்தகங்கள், கலை, இலக்கியம், சங்க இலக்கியம், சரித்திர நாவல், சமூக நாவல்கள், தன்னம்பிக்கை சுயமுன்னேற்றம், ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம், சமையல் மற்றும் பல்வேறு விதமான அனைத்து புத்தகங்களும் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட்டிருந்தன.

சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 13 நாட்கள் நடைபெற்ற இப்புத்தகத்திருவிழாவில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் என மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியினை பார்த்து பயன்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள இப்புத்தகக்கண்காட்சியானது தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, சேலம் புத்தக வாசிப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் விமலன், அன்பரசி, சேலம் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்