கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம்- குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்

நாகை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2018-11-21 23:00 GMT
திருமருகல்,

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமங்களில் நேற்று 6-வது நாளாக மின்சாரம் இல்லை. மேலும் குடிநீர் வினியோகமும் இல்லை. இதனால் மின்சாரம்- குடிநீர் வழங்க கோரி திருமருகல் அருகே வடகரை ஊராட்சியில் சுற்று வட்டார கிராம மக்கள் திரண்டு வந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் கிடைக்கவில்லை. இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

சேதமடைந்த பகுதிகளை பார்வையிட எந்த அதிகாரியும் இதுவரை வரவில்லை என கூறி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத் தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமருகல்- ஆண்டி பந்தல்இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைப்போல திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திட்டச்சேரி பஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து மின்சாரம்- குடிநீர் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் நாகை- நன்னிலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 

மேலும் செய்திகள்