திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப ஊர்வலம் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார்

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-21 22:15 GMT
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதையொட்டி தீபத்திருவிழா கமிட்டி பக்தர்கள் சார்பில் அர்த்தனாரீஸ்வரர் கோவில் வளாகத்தில் குன்றின் மீதுள்ள பாண்டீஸ்வரர் கோவில் முன்பு பாறை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று இரவு தீபம் ஏற்றப்படும் செம்பு கொப்பரையில் தீபம் ஏற்றி வேனில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்காக திருச்செங்கோடு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தீபத்தை ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் தீப விழா கமிட்டி தலைவர் குமரவேல், பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் மனோகரன், மயில் முருகேஷ் சுவாமிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி மேளத்தளத்துடன் சிவனடியார்கள், பக்தர்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு 6 மணிக்கு திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் வளாகத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்திற்கு 600 கிலோ நெய், 6 மூட்டை பருத்தி துணி, 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தீபம் 3 நாட்களுக்கு எரியும். இந்த தீபம் திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தெரியும். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் நிவாரண பணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விரைவாக செயல்பட்ட தமிழக அரசை பாராட்டுகிறோம். செயற்கைகோள் மூலம் தகவல் தெரிந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்றியது குறித்து விமர்சனம் செய்கிறவர்கள் இந்த மோசமான சூழ்நிலையை அரசியல் ஆக்கக் கூடாது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

கேரளாவில் அய்யப்பன் கோவில் வழிபாடு புகழ் பெற்று வருவதை தடுக்கும் நோக்கத்தில் தான் அதை போராட்டக்களமாக மாற்றி உள்ளனர். இந்துக்களின் வழிபாடு என்பது கூட்டு வழிபாடு தான். ஆனால் கேரளா அரசு பக்தர்களை கூட விடாமலும், கூட்டு வழிபாடு செய்ய விடாமலும் தடுத்து வருவது கண்டனத்துக்குரியது. இதுபற்றி மத்திய அரசு கவனத்தில் எடுத்து ஆலோசித்து நாடாளுமன்றத்தில் இந்து மக்களின் உணர்வை மதித்து தனிச்சட்டம் தீர்மானம் கொண்டு வரவேண்டும். திருச்செங்கோடு கைலாச நாதர் கோவிலில் தைபூசத்தன்று திருத்தேர் உற்சவம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்