கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு ரூ.33¾ லட்சம் பொருட்கள்; கலெக்டர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு ரூ.33 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Update: 2018-11-21 23:00 GMT
திருவள்ளூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 4 லாரிகளில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயலின் தாக்கத்தால் நாகை மாவட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக 4 லாரிகளில் அரிசி மூட்டைகள், குடிநீர் பாட்டில்கள், பால்பவுடர்கள், துணிமணிகள், வேட்டி சேலைகள்,அத்தியாவசிய மருந்து பொருட்கள், மரம் அறுக்கும் எந்திரம், தரை விரிப்புகள் என ரூ.33 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் 21 பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் நாகை மாவட்டத்தில் அதிக அளவில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதால் அதனை அகற்றுவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 100 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் துப்புரவு பணியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்