பூண்டி ஏரியில் கலெக்டர் ஆய்வு
பூண்டி ஏரியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் நேற்று ஆய்வு செய்தார்.;
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி பூண்டிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அக்டோபர் மாதம் 28–ந் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் நேற்று மதியம் பூண்டி ஏரியை ஆய்வு செய்தார். முதலில் அவர் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை ஆய்வு செய்தார். இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுகளின் உறுதிதன்மை பற்றி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் அவர் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாயை ஆய்வு செய்தார். பின்னர் பூண்டி ஏரியை ஆய்வு செய்து தண்ணீர் மட்டம் மற்றும் நீர் இருப்பு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பலத்த மழையை தொடர்ந்து பெய்து பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட 16 மதகுகளை தயாராக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி ஏரியில் நீர்மட்டம் 21.10 அடியாக பதிவானது. 357 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 18 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.