சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து திடீர் பள்ளம், பெண் பயணி காயம்

சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் விழுந்து ஒரு பெண் பயணி காயம் அடைந்தார்.

Update: 2018-11-21 22:00 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய முனையங்களில் இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 25 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 34 முறை தடுப்பு சுவர் போல் பதிக்கப்பட்ட கண்ணாடிகளும், 6 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், தலா ஒரு முறை விளக்கு கண்ணாடி, அறிவிப்பு பலகை டி.வி. கண்ணாடி உடைந்து உள்ளன. இந்த சம்பவங்களில் 13 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் உள்நாட்டு வருகை பகுதியில் 3–வது, 4–வது நுழைவு வாயில் நடுவே தரையில் பதிக்கப்பட்டு இருந்த கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டது.

அந்த சமயம் மராட்டிய மாநிலம் புனே நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஒரு ஒரு பெண் தன் கணவருடன் டிராலியை தள்ளிக்கொண்டு நடந்து சென்றார். திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அந்த பெண் விழுந்து காயம் அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள் அங்கு வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் யாரும் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்