கோவை அருகே கல்லூரியில் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் படுகொலை - 3 பேர் கைது
கோவை அருகே 2 கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் என்ஜினீயரிங் மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கோவை-பொள்ளாச்சி சாலை மலுமிச்சம்பட்டி அருகே ஒரே வளாகத்தில் இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு கல்லூரி தன்னாட்சி நிர்வாகம் பெற்ற கல்லூரி. மற்றொரு கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரி ஆகும்.
இந்த நிலையில் தன்னாட்சி நிர்வாகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்லூரி தான் சிறந்தது என்றும், அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரி தான் சிறந்தது என்றும் கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை 10 மணியளவில் தன்னாட்சி நிர்வாகம் பெற்ற கல்லூரியில் பி.இ. மெக்கானிக் என்ஜினீயரிங் பிரிவில் படிக்கும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெங்கமேடு காவேரி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கவுசிக் (வயது 18) மற்றும் திருச்சி குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த ஆரிப் அகமது கான் என்பவரின் மகன் அஸ்ரப் முகமது (18) மற்றும் அவர்களது நண்பர்கள் கல்லூரி வளாகத்தில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர் கள் சிலர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் அஸ்ரப் முகமதுவை சில மாணவர்கள் தாக்கினார்கள். அவர்களை மற்ற மாணவர்கள் தடுக்க முயன்றனர். உடனே ஒரு மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்ரப் முகமதுவை குத்தினார்.
இதில் அந்த மாணவரின் இடது மார்பு மற்றும் இடது கை தோள்பட்டையில் கத்தி குத்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்ரப் முகமதுவின் நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர். அஸ்ரப் முகமதுவை கத்தியால் குத்திய மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். ரத்த வெள்ளத் தில் கிடந்த மாணவரை மற்ற மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஸ்ரப் முகமது பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அஸ்ரப் முகமதுவின் நண்பர் கவுசிக் கோவை செட்டிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே கல்லூரி வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். ஐ,.டி. பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் மதுரை செங்கோல் நகரை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் தினகரன்(19), ஏரோநாட்டிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் நீலகிரி மாவட்டம் தலைகுந்தாவை சேர்ந்த பிரகாசின் மகன் நிதிஷ்குமார்(19), பி.இ.மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் சரவணக்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 302(கொலை) உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக அதே கல்லூரியில் படிக்கும் ரோஜர் டைட்டஸ் (19), ரிஜா தவுபிக்(19), பாரதி(19) ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திலேயே மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.