நவம்பர் மாத பச்சை தேயிலைக்கு இருவித விலை நிர்ணயம் - இன்கோ சர்வ் அறிவிப்பு

நவம்பர் மாத பச்சை தேயிலைக்கு இருவித விலை நிர்ணயம் செய்து இன்கோ சர்வ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2018-11-21 22:00 GMT
மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற் சாலைகளும், 100-க் கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சமாக கிலோ ரூ.30 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேயிலை வாரியத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி தேயிலை வாரியம் சார்பில் தற்காலிகமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகளால் வினியோகிக்கப்படும் பச்சை தேயிலையின் சராசரி விலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச விலையை மாதந்தோறும் முன்கூட்டியே (அதாவது 1-ந் தேதி) நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது. இதனால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சியடைந்தனர். இதனால் அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும் மாதந்தோறும் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், 15-ந் தேதி முதல் மாத கடைசி நாள் வரையும் என இருவிதமாக முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்ய குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி நடப்பு நவம்பர் மாத பச்சை தேயிலை கிலோவுக்கு கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கைகாட்டி தொழிற்சாலையில் ரூ.15.50(1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை), மஞ்சூர், கரும்பாலம், நஞ்சநாடு ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.13(1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை) மற்றும் ரூ.15(15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை), பந்தலூர், சாலீஸ்பரி தொழிற்சாலைகளில் ரூ.14(1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை), குந்தா, பிக்கட்டி, இத்தலார், மேற்குநாடு, மகாலிங்கா, கிண்ணக்கொரை ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.13 (1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை), ரூ.14 (15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை), பிராண்டியர், பிதிர் காடு, எப்பநாடு ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.13(1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை), ரூ.13.50(15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை).

தற்போது தேயிலைத்தூளுக்கு ஏல மையங்களில் நல்ல விலை கிடைப்பதால், பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.17 முதல் ரூ.18 வரை நிர்ணயிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் குறைந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்