பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து தொடக்கம் : மிதமான வேகத்தில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. மிதமான வேகத்தில் செல்லும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
பழனி,
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘கஜா’ புயல் தாக்கியது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள மலைப்பாதைகள், நகரின் முக்கிய இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் பாறைகளும் விழுந்து கிடந்தன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டனர்.
இதன் பலனாக கொடைக்கானல் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முன்னதாக மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்தது, பாறைகள் விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் பழனி-கொடைக்கானல் பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடியாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் மலைப்பாதை வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி, மலைப்பாதையில் மிதமான வேகத்தில் செல்லும்படி அறிவுரை வழங்கினர்.
மேலும் மலைப்பாதையில் திடீரென பாறைகள் விழுந்தாலோ, மரங்கள் சாய்ந்தாலோ உடனடியாக பழனி போலீசாருக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி, தொடர்பு எண்களையும் வழங்கினர். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.