காவிரித்தாய்க்கு சிலை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் வாட்டாள் நாகராஜ் பேட்டி

கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் காவிரித்தாய்க்கு சிலை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.;

Update: 2018-11-20 22:30 GMT
மைசூரு, 

கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் காவிரித்தாய்க்கு சிலை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

காவிரித்தாய்க்கு சிலை

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் அமைந்துள்ளது கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை. காவிரியின் குறுக்கே அமைந்துள்ள இந்த அணை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அணையின் முன்பு பிருந்தாவன் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க இந்த அணைப்பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும், அருங்காட்சியக கட்டிடத்துடன் 350 அடி உயரத்தில் காவிரித்தாய் சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தையும் மண்டியா மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீ நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார்.

வாட்டாள் நாகராஜ் ஆய்வு

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் காவிரித்தாய் சிலை அமைக்கவும், பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும் கன்னட அமைப்பினர், பா.ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுஒருபுறம் இருக்க நேற்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வாட்டாள் நாகராஜ் கே.ஆர்.எஸ். அணைக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் காவிரித்தாய் சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிர போராட்டம்

பொழுதுபோக்கு பூங்கா மற்றும் காவிரித்தாய் சிலை அமைக்கப்பட்டால் கே.ஆர்.எஸ். அணைக்கு பாதிப்பு ஏற்படும். இங்குள்ள பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்பட்டால் அதன்மூலம் அணை பலவீனம் அடையும். விரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் இந்த திட்டத்தை கைவிடுவதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் நடத்தப்படும்.

திப்பு சுல்தான் பெயரில் மதசார்பற்ற முறையில் அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்க வேண்டும்.

திப்பு சுல்தானுக்கு டெல்லியில் சிலை

திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்த இடத்தில் நாம் இருப்பது பெருமைக்குரியது. இந்த இடத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த இடத்தை இன்னும் வளர்ச்சி அடையச்செய்ய வேண்டும். நாடாளுமன்ற கட்டிடம் முன்பு திப்பு சுல்தான் சிலை அமைக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

இதையடுத்து அவர் திப்பு சுல்தான் சமாதிக்கு சென்று பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்