‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு வணிகர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு வணிகர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
வேலூர்,
வேலூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வணிக வளாகங்களில் கடைகள் ஏலம் விடுவதில் ஏற்கனவே உள்ள வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ‘கஜா’ புயலில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது வரவேற்கத்தக்கது.
அதேபோல் இந்த புயலினால் பல்வேறு சிறு, குறு வணிகர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். எனவே அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நாட்டிற்கு ஜி.எஸ்.டி. மூலம் வருவாயை பெற்று தருபவர்கள் வணிகர்கள். அவர்கள் பாதிக்கப்படும்போது நிவாரணம் வழங்காமல் அரசு அவர்களை வஞ்சிக்கிறது. மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வங்கி மூலம் வட்டியில்லா கடன்வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி.புகுத்தப்படுவதை கண்டித்து வணிகர்களை திரட்டி வருகிற டிசம்பர் மாதம் 19-ந் தேதி டெல்லியில் ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதைத்தொடர்ந்து 3 நாள் கடையடைப்பு போராட்டமும் நடத்த உள்ளோம். மத்திய அரசு ஒரு மந்திரியை அனுப்பி கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு நடத்தி மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு, வணிகர் சங்க வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஞானவேலு உள்பட பலர் உடன் இருந்தனர்.