நிலுவைத்தொகை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கரும்பு விவசாயிகளுடன் குமாரசாமி ஆலோசனை

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கரும்பு விவசாயிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-11-20 23:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கரும்பு விவசாயிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் நாளை (வியாழக்கிழமை) அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். .

குமாரசாமி ஆலோசனை

பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்திருக்கும் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புகளுக்கு நிலுவைத்தொகையை கொடுக்கவில்லை. அந்த நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு விவசாயிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி, பெலகாவிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துவது ரத்து செய்யப்பட்டதால் பெலகாவி சுவர்ணசவுதாவுக்குள் லாரிகளுடன் நுைழந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை எற்படுத்தியது.

இதையடுத்து, சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுப்பது குறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தொழில்துறை மற்றும் சர்க்கரைத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆலோசனை கூட்டத்தின் போது சர்க்கரை ஆலைகள் ரூ.2 ஆயிரம் கோடி வரையிலான நிலுவைத்தொகையை வழங்கவில்லை என்று விவசாயிகள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் குற்றம்சாட்டினர். அப்போது மந்திரி கே.ேஜ.ஜார்ஜ், சர்க்கரை ஆலைகள் ரூ.58 கோடி மட்டுமே நிலுவைத்தொகை வைத்திருப்பதாக கூறினார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசுக்கு தவறான தகவல்களை சர்க்கரை ஆலைகள் வழங்கி இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். அதே நேரத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், தற்போது சர்க்கரையின் விலை குறைந்து விட்டதால் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை கொடுக்க முடியவில்லை என்றும், தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்தும் முதல்-மந்திரி குமாரசாமியிடம் விளக்கமாக எடுத்து கூறினர்.

அப்போது முதல்-மந்திரி குமாரசாமி குறுக்கிட்டு, சர்க்கரை விலை உயர்ந்திருந்தபோது கிடைத்த லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு கொடுத்தீர்களா?, தற்போது விலை குறைந்திருப்பதாக கூறி விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை கொடுக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தவித்தனர். முதலில் கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

நிலுவைத்தொகையை உடனே வழங்க உத்தரவு

அதன்பிறகு, கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களிடம் தனியாக முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் மட்டும் தனியாக ஆலோசித்தார். அப்போது அவர், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் கரும்புக்கு ஆதரவு விலையை நிர்ணயிப்பது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி விவசாயிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை பேச்சுவார்த்தை

இந்த நிலையில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் நிலுவைத்தொகையை வழங்க முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டாலும், அதனை ஏற்கவில்லை. அதாவது சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர் கள் சார்பாக, ஆலைகளின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்ததால், நிலுவைத்தொகை வழங்குவது குறித்து உரிமையாளர்களிடம் ஆலோசித்து தான் உறுதியான பதில் அளிக்க முடியும் என்று கூறினார்கள்.

இதையடுத்து, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களுடன் நாளை(வியாழக்கிழமை) முதல்-மந்திரி குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அன்றைய தினம் உரிமையாளர்கள் கண்டிப்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் இருந்து கண்டிப்பாக நிலுவைத்தொகை பெற்றுக் கொடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் முதல்-மந்திரி குமாரசாமி உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, கரும்பு விவசாயிகள் விதானசவுதாவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

பொறுப்பு மந்திரி புறக்கணிப்பு

இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் தான் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை கொடுக்காமல் உள்ளது. அதே நேரத்தில் பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, அவரது சகோதரர் சதீஸ் ஜார்கிகோளி, லட்சுமி ெஹப்பால்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் நடத்தி வரும் சர்க்கரை ஆலைகளும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவைத்ெதாகையை வழங்காமல் உள்ளது.

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

மேலும் செய்திகள்