அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

Update: 2018-11-20 22:00 GMT
கோவை,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ் (வயது 32). இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி கோவை கோல்டுவின்ஸ் தச்சன்நகரை சேர்ந்த நர்சு சத்தியா என்பவரை கொலை செய்த வழக்கில் பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டு 10 வருடம் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் புள்ளப்பநாயக்கன்பட்டியில் வசித்து வரு கிறார்கள். இந்த நிலையில் செல்வத்தின் மனைவி சொத்துக்களை விற்று ஆடம்பரமாக செலவு செய்து வருவதாகவும், அவருக்கும் ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதும் செல்வத் துக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் தனது மனைவியை கொலை செய்வதற்காக சிறையில் இருந்து தப்பிச்செல்ல முடிவு செய்தார். இதனால் அவர் கடந்த மாதம் 6-ந் தேதி சிறையில் கொசுவர்த்தி சுருளை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதித்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அவரால் தப்பி செல்ல முடிய வில்லை.

எனவே அவர் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டார். உடனே அவர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு போலீஸ்காரர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். கடந்த மாதம் 9-ந் தேதி அதிகாலை கழிவறை செல்வதாக கூறிய செல்வம் அங்கிருந்த ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பிச்சென்றார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வத்தை தேடினார்கள். அத்துடன் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால் செல்வம் தப்பிச்சென்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் போலீசாரால் அவரை இதுவரை பிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியாததால், அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

போலீசார் நினைத்தால் எந்த வழக்குகளிலும் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் கோவையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிப்பதில் தீவிரம் காட்டவில்லை. சம்பவம் நடந்ததும் சில நாட்கள் மட்டுமே போலீசார் தீவிரமாக செயல்படுகிறார்கள். பின்னர் அந்த சம்பவத்தையே மறந்து விடுகிறார்கள். அதற் காக அமைக்கப்படும் தனிப்படையும் சரியாக செயல்படுவது இல்லை. அதுபோன்று தான் தப்பி ஓடிய கைதியை பிடிப்பதிலும் நடந்து வருகிறது.

இதுதவிர கோவையில் தாய், மகளை எரித்த கொலை வழக்கு, சாமியார் கொலை வழக்கு, இளம்பெண் ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய வழக்கு போன்ற வழக்குகளிலும் இதுவரை குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. எனவே மாநகர போலீஸ் கமிஷனர் தனிக்கவனம் செலுத்தி குற்றவாளிகளை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்