ராஜபாளையம் பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்
ராஜபாளையம் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிகின்றனர்.
ராஜபாளையம்,
தமிழகத்தின் பல இடங்களில் காய்ச்சல் பரவி பயமுறுத்தி வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். அரசு மருத்துவமனையில் பலர் உள் நோயாளிகளாக சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிலர் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியதிருப்பதால் கூடுதல் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் கடந்த 2014–ம் ஆண்டு காய்ச்சலுக்கு 22 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.