காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதிதிராவிடர் விடுதி ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்; எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் பணி நியமனம் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி ஊழியர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை கோரி தலித் விடுதலை இயக்கம் சார்பில் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தலித் விடுதலை இயக்க மாநில மாணவரணி செயலாளர் பீமாராவ் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கடந்த 2015–16–ம் ஆண்டில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் 57 சமையலர்கள், 36 துப்புரவு பணியாளர்கள் என 93 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இதில் 19 சமையலர், 26 துப்புரவு பணியாளர்கள் தவிர மற்றவர்கள் பணி செய்ய இயலாது என கடந்த 11–ந்தேதி விடுதி காப்பாளர்கள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கப்படாத ஊழியர்கள் கடந்த 12–ந்தேதி தங்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக கூட்டரங்கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிக்கு செல்லலாம் என மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வாய்மொழியாக உத்தரவிட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து மீண்டும் பணிக்கு சென்ற போது அவர்களை பணி செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த பிரச்சினை என்றும், இதில் தலையிட முடியாது என்றும் கூறி விட்டது.
3 ஆண்டுகளாக பணியாற்றி முறைப்படி ஊதியம் பெற்று வரும் இந்த ஊழியர்கள் எந்த ஒரு முன்அறிவிப்பும் இன்றி வாய்மொழி உத்தரவின் மூலம் பணி செய்ய கூடாது என்று கூறுவது முறையற்ற செயல் ஆகும். இதனால் அவர்கள் குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிர் நலத்துறை அலுவலர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பணி செய்ய அனுமதிக்கப்படாத 47 ஊழியர்களுக்கும் நிரந்தர பணி உத்தரவு வழங்க வேண்டும்.
முறையான உத்தரவு இன்றி சமையலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை பணி செய்ய விடாமல் அலைக்கழித்து வரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.