புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் குடிசைவாசி பெண்கள் விரக்தி அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் வாக்குவாதம்

முதல்-அமைச்சர் வருகையின் போது புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் குடிசைவாசி பெண்கள் விரக்தி அடைந்தனர். அவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-20 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரில் ‘கஜா’ புயலின் வதத்தால் காணும் இடமெல்லாம் சாய்ந்த மரங்கள், ஒடிந்த மரக்கிளைகள், சேதமான வீடுகளின் மேற்கூரைகள் என நகரமே சிதைந்துபோய் உள்ளது. படிப்படியாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது. மின்சாரம் இன்றி கடந்த 5 நாட்களாக அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தற்போது குறிப்பிட்ட இடங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பும் வழங்கப்பட்டு விட்டது. புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காதா? என பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை நகரில் மாப்பிள்ளையார்குளம் பகுதியில் நிவாரண உதவி வழங்கிட வருகை புரிந்தார். அதற்காக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவற்றில் சில இடங்களில் உள்ள பெண்களிடம் அ.தி.மு.க. பிரமுகர்களே நிவாரண உதவி பெற்றுத்தருவதாக கணக்கெடுப்பு செய்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் தான் நேற்று புயலால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையார்குளம் பகுதியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட பயனாளிகளை தவிர, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டனர். போலீசாரும் பாதுகாப்பை முடித்து கலைந்து செல்ல தொடங்கினர். சிறிது நேரத்தில் மாப்பிள்ளையார்குளம் அடுத்த பாலன்நகர் பகுதியை சேர்ந்த குடிசைவாசி பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள், நிவாரண பொருட்கள் தருவதாக கணக்கெடுத்து விட்டு எங்களை ஏமாற்றி விட்டனர். எங்களை முதல்-அமைச்சரை சந்திக்கவும் விடவில்லை. குடிசைவாசிகளான நாங்கள் தண்ணீர் நிறைந்த பகுதியில் அல்லோலப்பட்டு வருகிறோம் என்று ஆவேசமாக கூறினர்.

இதேபோல் மாப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த மற்றொரு பகுதியினரும் சலசலப்பை ஏற்படுத்தினர். உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்காமல் எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கி இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிவாரண உதவிக்கான கவர்களை வைத்து கொண்டு நின்ற பெண் அதிகாரியிடமும் முறையிட்டனர். அவரோ, கவரில் பெயர் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே கொடுக்க முடியும். பெயர் இல்லாதவர்களுக்கு தர இயலாது என மறுத்து விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்