காஞ்சீபுரம் அருகே 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது; கடத்த முயன்ற லாரி பறிமுதல்

காஞ்சீபுரம் அருகே 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்த முயன்ற சிமெண்டு மூட்டைகளுடன் கூடிய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-20 22:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு ஒரு மினி லாரி 80 சிமெண்டு மூட்டைகளுடன் சென்றுகொண்டு இருந்தது. காஞ்சீபுரம் அருகே ஓரிக்கை ஜங்சனில் சில வழிப்பறி கொள்ளையர்கள் அந்த லாரியை கத்திமுனையில் வழிமறித்தனர். இதனால் டிரைவர் லாரியில் இருந்து கீழே இறங்கினார். அந்த கொள்ளையர்கள் லாரியை வேகமாக எடுத்ததில் லாரி தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.

இதுகுறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் ஓரிக்கை ஜங்சனுக்கு விரைந்து சென்றனர். அப்போது லாரியில் இருந்த வழிப்பறி கொள்ளையர்கள் போலீசாரை கண்டதும் மிரண்டு விழித்தனர்.

வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். லாரி டிரைவர் காஞ்சீபுரம் களக்காட்டூரை சேர்ந்த சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிமெண்டு மூட்டைகளுடன் லாரியை கடத்த முயன்ற வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் காஞ்சீபுரம் அருகே உள்ள ராஜாம்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (23), கருக்குப்பேட்டையை சேர்ந்த நேதாஜி (25), ஓரிக்கையை சேர்ந்த சிவசெல்வம் (29) என தெரியவந்தது. அவர்கள் வேறு ஏதாவது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் கடத்த முயன்ற லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்