தர்மபுரி பஸ் எரிப்பு கைதிகள் விடுதலை: வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்ததை கண்டித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வடவள்ளி,
வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ்சை தர்மபுரி இலக்கியம்பட்டியில் அ.தி.மு.க. வினர் சிலர் தீ வைத்து எரித்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய மாணவிகள் தீயில் எரிந்து மரணமடைந்தனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை கைதிகளாக இருந்த 3 பேரை தமிழக கவர்னர் விடுதலை செய்ததை கண்டித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழக பொட்டானிக்கல் கார்டன் வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தினேஷ், மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் கவர்னரை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதில் கவனம் செலுத்த வேண்டிய கவர்னர் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரை விடுதலை செய்தது மனிதாபிமானமற்ற செயல். அந்த 3 பேரின் விடுதலையை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 3 பேர் விடுதலை செய்யப்பட்ட தை கண்டித்து முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என்றனர்.
முன்னதாக வேளாண்மை பல்கலைக்கழகத்தில், தர்மபுரி பஸ் எரிப்பில் பலியான மாணவிகளின் நினைவுச்சின்னத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்த முயன்றனர். இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.