செல்போனை சரிசெய்து கொடுக்காமல் இழுத்தடிப்பு: தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு - பழுதுபார்க்கும் மையத்துக்கு கோர்ட்டு உத்தரவு

செல்போனை சரி செய்து கொடுக்காமல் இழுத்தடித்த பழுது பார்க்கும் மையம், தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-11-19 22:15 GMT
கோவை,

கோவையை அடுத்த சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் வின்சென்ட்ராஜ், தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2014-ம் ஆண்டில் கோவையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரூ.4 ஆயிரத்து 300-க்கு ஒரு செல்போன் வாங்கினார். சில நாட்களில் அந்த செல்போனில் உள்ள பட்டன் சரியாக இயங்கவில்லை.

எனவே அவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவன பழுதுபார்க்கும் மையத்தில் அந்த செல்போனை கொடுத்து பழுது நீக்கி தருமாறு கூறினார். அதை வாங்கிய ஊழியர்கள் ஒரு மணி நேரத்தில் பழுதை நீக்கி தருவதாக கூறிவிட்டு 2 நாட்கள் ஆகியும் அந்த செல்போனை பழுது நீக்கி கொடுக்கவில்லை.

பலமுறை அந்த மையத்துக்கு தொடர்பு கொண்டு அவர் கேட்டபோதும் அவர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

எனவே அவர் இது குறித்து கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். மனுவை விசாரித்த கோர்ட்டின் தலைவர் பாலச்சந்திரன், உறுப்பினர் பிரபாகர் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பில், குறிப்பிட்ட நேரத்துக்குள் வாடிக்கையாளருக்கு செல்போனை பழுது நீக்கி கொடுக்காமல் இருந்தது சேவைக்குறைபாடு ஆகும்.

எனவே அவருக்கு அந்த செல்போனின் தொகையான ரூ.4 ஆயிரத்து 300-ஐ 9 சதவீத வட்டியுடன் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும், மனஉளைச்சல் மற்றும் இழப்பீடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரத்தை பழுதுபார்க்கும் மையம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்