ஊட்டி மேட்டுச்சேரியில்: சாலையை சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி மேட்டுச்சேரியில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-11-19 22:15 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி, ஊட்டி மேட்டுச்சேரி இந்துநகர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து தரக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுச்சேரி இந்துநகர் பகுதியில் பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்து பஸ்களில் செல்ல சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அங்கு சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும், முதியோர்கள், நோயாளிகள் அவசர கால நேரத்தில் மருத்துவமனை செல்வதற்கும், கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக மருத்துவமனை செல்வதற்கு கஷ்டப்பட வேண்டிய நிலை நிலவுகிறது.

மழைக்காலங்களில் மண் சாலையில் குண்டும், குழியுமான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கால் தவறி கீழே விழும் நிலை காணப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கும் அபாயம் உள்ளது. மேட்டுச்சேரி பகுதி அருகே உள்ள கணபதி நகரில் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலையை மேட்டுச்சேரி பகுதி வரை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதிக்கு கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 188 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெறுவதற்கான ஆணை, மந்தாடா பகுதியில் ஏற்பட்ட அரசு பஸ் விபத்தில் உயிரிழந்த பெங்களூருவை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நீலகிரி குரும்பர் பழங்குடியினர் கைவினை மற்றும் பல்நோக்கு சிறுதொழில் சங்கத்திற்கு வீட்டு தோட்டம் அமைக்க ரூ.1 லட்சத்துக்கான காசோலை, மாற்றுத்திறனாளி சந்தானகுமாருக்கு மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியில் இருந்து பெட்டிக்கடை வைக்க ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

மேலும் செய்திகள்