புயலால் பாதிக்கப்பட்டவர்களை கவர்னர் கிரண்பெடி சந்திக்காதது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி

காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கவர்னர் கிரண்பெடி சந்திக்காதது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

Update: 2018-11-19 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்து ஆறுதலையும், நிவாரண பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை ஆகும். ஆனால் இதில் புதுவை அரசு தவறியதால் காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருந்துயரம் அடைந்துள்ளனர். குறிப்பாக கடலோர பகுதி மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் இதுவரை மின் இணைப்புகள் சரிசெய்யப்படவில்லை.

தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கண்துடைப்பு நாடகமாக காரைக்காலுக்கு முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று வந்துள்ளனர். ஆனால் எவ்வளவு பாதிப்பு? என்பது கணக்கிடப்படவில்லை. காரைக்காலை சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் தனது தொகுதியான திருநள்ளாறில் மட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

காரைக்கால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல கவர்னர் கிரண்பெடி அங்கு செல்லவில்லை. அங்கு போகமலேயே இந்த அரசு அவர்களுக்கு எங்கே உதவிகளை அளித்துவிடுமோ என்று நினைத்து கீழ்த்தரமான கருத்துகளை வெளியிடுகிறார். இந்த அரசு செயல்படக்கூடாது என்ற ஓரம்ச திட்டத்துடன் செயல்படுகிறார். இவர் தாயுள்ளம் கொண்டவரா? மக்கள் மீது உண்மையிலேயே இவருக்கு அக்கறை இருந்தால் காரைக்கால் சென்றிருக்கவேண்டும்.

காரைக்காலில் கலெக்டர் தவிர எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இல்லை. அங்கு எந்த நிவாரண வேலைகளும் நடக்கவில்லை. கவர்னர் சொல்லும்போது மட்டும் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். காரைக்காலில் ரூ.500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் ஈடுபடாமல் கவர்னர் கிரண்பெடியும், முதல்–அமைச்சர் நாராயணசாமியும் குழாயடி சண்டையில் ஈடுபடுகிறார்கள்.

புதுவையில் குப்பை வாருவதற்கு கவர்னர் ஓடுகிறார். அவர் ஏன் புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மக்களை சந்திக்கவில்லை? காரைக்காலை உடனே புயல் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவேண்டும். அங்கு பேரிடர் நிதியைக்கொண்டு நிவாரணங்களை வழங்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணமாக வழங்கவேண்டும்.

நிதியை கையாளுவதில் கவர்னருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக நிதித்துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதே நிதித்துறை செயலாளர்தான் ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது முதல்–அமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு கவர்னரிடம் ஒப்புதலுக்கு செல்லாமலேயே அனுமதி அளித்தார். இப்போது முதல்–அமைச்சரின் உத்தரவையே ரத்து செய்கிறார்.

இவர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். புதுவையில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட குழுவை அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்