கொளத்தூர் பகுதியில் பச்சை மிளகாய் விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
கொளத்தூர் பகுதியில் பச்சை மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொளத்தூர்,
கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிக காரம், நெடி மற்றும் சுவை கொண்ட மிளகாய் வற்றலுக்கு பெயர் போன கொளத்தூர் வட்டாரத்தில் நடப்பாண்டில் ஆடிப்பட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டது.
குறிப்பாக சியாரா, சிபி 22 என்ற வகையான பச்சை மிளகாய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் இந்த ரகங்களையே சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பச்சை மிளகாய் சாகுபடி செய்வதில் கொளத்தூர் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில் தற்போது கொளத்தூர் பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அதிகளவில் மூடுபனி காணப்படுகிறது. இதனால் பச்சை மிளகாய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:- கொளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மூடுபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பச்சை மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மிளகாயின் தரம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கருதுகிறார்கள். இதனால் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.10-க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாலும், விலை வீழ்ச்சியாலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.