கொடைக்கானல் மலைப்பாதையில் மண் சரிவு: மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-19 21:45 GMT
கொடைக்கானல், 


‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும், 300-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன. மரங்கள் விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டதால் பல இடங்களில் மலைப்பாதைகள் சேதமடைந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே உள்ள குருசடி பகுதியில் நேற்று முன்தினம் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகளின்போது, லேசான மழை பெய்ததால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. கனரக வாகனங்கள் செல்ல நேற்று முதல் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நேற்று காலையில் மீண்டும் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் நேற்று காலை 7 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே கொடைக்கானல் பகுதியில் இருந்து சென்ற வாகனங்கள் பெருமாள்மலை பகுதியிலும், வத்தலக்குண்டு வழியாக வந்த வாகனங்கள் அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன. பின்னர் இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

இதற்கிடையே மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள பாறைகளில் எந்திரம் மூலம் துளையிடப்பட்டு, அதில் கான்கிரீட் கலவைகள் கொட்டப்பட்டன. அதனை தொடர்ந்து கான்கிரீட் கலவை கொட்டப்பட்ட இடத்தில், மணல் மூட்டைகளை அடுக்கும் பணி மாலையில் தொடங்கியது. இந்த பணி இன்று (செவ்வாய்க்கிழமை) வரை நீடிக்கும் என தெரிகிறது. மலைப்பாதை சீரமைப்பு பணிகள் முடிந்த உடன் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

இந்த சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார், உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசாரும், தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மகேந்திரன், பட்டுராஜன் தலைமையில் அந்த துறை அலுவலர்களும் மலைப்பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்