பழனி அருகே பயங்கரம்: கத்தியால் குத்தி பெண் கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்

பழனி அருகே, கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-11-19 21:45 GMT
நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அ.கலையம்புத்தூரை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மகன் பத்தரராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காளஸ்வரி (28). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பு கணவரை பிரிந்த காளஸ்வரி, அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை வேலுமணி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில், தண்ணீர் பிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள பொதுக்குடிநீர் குழாய்க்கு காளஸ்வரி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பத்தரராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத காளஸ்வரி நிலைகுலைந்து போனார். இதில் காளஸ்வரி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற பத்தரராஜை, அக்கம்பக்கத்தினர் பிடித்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பத்தரராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஓராண்டுக்கு முன்பு எனது மனைவி செல்போனில் அதிக நேரம் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டே இருந்தார். அதுபற்றி நான் கேட்கும் போதெல்லாம் நண்பர் என கூறி சமாளித்துவிடுவார். ஆனால் அவருடைய நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நான் எனது மனைவியை கண்டித்தேன். அதனால் அவர் என்னை பிரிந்து, குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஆனாலும் நண்பருடன் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு தான் இருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நேற்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக வந்த காளஸ்வரியை, நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்