ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பெண் பலி கணவர் கண்எதிரே பரிதாபம்
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பெண், கணவர் கண்எதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டையை அடுத்த அவரக்கரை பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 50). இவரது மனைவி உமாராணி (45). இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை உமாராணியை வேலைக்கு அழைத்து செல்வதற்காக மேகநாதன், அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டைக்கு சென்றார்.
ராணிப்பேட்டை ஸ்டேட் பாங்க் அருகே சென்றபோது, ஆற்காட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உமாராணி சம்பவ இடத்திலேயே கணவர் கண்எதிரே பரிதாபமாக உயிரிழந்தார். மேகநாதனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.